×

பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்! மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட 14 வயது சிறுவன்..! 

 

திருவள்ளுர் அடுத்த வயலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மோனிஷ் என்ற 14 வயது மாணவன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல நேற்று அவர் பள்ளிக்கு சென்றுள்ளார். மதியம் உணவு இடைவேளையின் போது, பள்ளிக்கு அருகாமையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையலறைக்கு சென்றுள்ளார்.

அப்போது கட்டிடத்தின் மீது தன்னை ஏற்றி விடுமாறு சக மாணவர்களிடம் கேட்டுள்ளார். உடனே சக மாணவர்கள், மோனிஷை கட்டடத்தின் மீது ஏற்றியுள்ளனர். அப்போது கட்டிடத்தின் மீது சென்ற உயர் அழுத்த மின் கம்பி, மோனிஷ் மீது உரசியுள்ளது. மின்சாரம் பட்டதும், உடனே மோனிஷ் தூக்கி வீசப்பட்டான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

உடனே சமையலறை கட்டடத்திற்கு சென்ற ஆசிரியர்கள், கீழே விழுந்து கிடந்த மாணவர் மோனிஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாணவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டடம் குறித்து, மாணவருக்கு எப்படி விபத்து ஏற்பட்டது என சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் மாணவன் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.