ஒரே நாளில் அடுத்தடுத்து சோகம்..! தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட டி.எஸ்.பி.,எஸ்.ஐ. உயிரிழப்பு..!!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி இடையகோட்டை, கள்ளிமந்தையம் பகுதிகளில் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், 58, பணியில் இருந்தார். இவர் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையக்கோட்டை வாக்குச்சாவடி பகுதிகளில் தேர்தல் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
நேற்று மாலை, இடையகோட்டை அருகே வாகனத்தில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது, காளாஞ்சிபட்டி அருகே நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இரவு உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மல்லிகரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன். இவர் கடந்த சில நாட்களாக தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று நாகியம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் கண்ணதாசன் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே கண்ணதாசன் பரிதாபமாக இறந்தார். இதய செயழிலப்பால் கண்ணதாசன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.