கேரளா எல்லை பகுதியில் சோகம்: தண்டவாளத்தைக் கடந்த தாய், குட்டி யானைகள் மீது ரயில் மோதி பலி!
தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாவட்டமான பாலக்காட்டின் வாளையார் அருகே உள்ள சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில், குட்டியுடன் தாய் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது, அந்த வழியில் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரு யானைகள் மீது பயங்கரமாக மோதியது. இதில், இரு யானைகளும் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியால் யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று (ஆக.,12) உலக யானைகள் தினத்தன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து தமிழக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது; மதுக்கரை வனப்பகுதியில் அமைந்துள்ள 'பி' டிராக்கில் தமிழக எல்லையைக் கடந்து, கேரளாவை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் மிகவும் வளைவானதாகவும், ஒரு பாலத்தையும் கொண்டுள்ளது. லோகோ பைலட் அந்தப் பாலத்தைக் கடந்து, வளைவைக் கடந்த பிறகு தான், அவர் யானையை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக ரயிலில் வேகத்தை குறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதுவே விபத்துக்கான காரணமாக இருந்திருக்கலாம், இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக வனப்பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் அமைக்கப்பட்ட ஏ மற்றும் பி என்ற இரு ரயில் தடங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஏஐ கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களாகவே யானைகள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு வருகிறது. எனவே, கேரள அரசும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, யானைகளின் உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.