கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை..!
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. எனவே மேற்கண்ட 2 நாட்கள் இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. எனவே 2 நாட்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. பகல் நேரத்தில் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பயணிகள் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். லக்ஷ்மி மில்ஸ், பீளமேடு, ஹோப்ஸ், சித்ரா, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்லக்கூடிய வகையில் இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு அக்டோபரில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.