மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்- தேனாம்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை தேனாம்பேட்டையில் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் மிகமுக்கிய சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. தூரத்திற்கு, ரூபாய் 621 கோடி செலவில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தேனாம்பேட்டை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், தியாகராய சாலையில் இடதுபுறம் திரும்பி, மா.பொ.சி., சந்திப்பில் வலது புறம் திரும்பி, வடக்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும் பின் அங்கிருந்து, விஜயராகவா சாலையில் வலது புறம் திரும்பி சற்று துாரம் சென்று, பின் இடது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக செல்லலாம் அண்ணா சாலையிலிருந்து, தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தியாகராய சாலை வழியாகச் செல்லலாம்.
தி.நகரிலிருந்து அண்ணாசாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள், தியாகராய சாலையில் உள்ள மா.பொ.சி., சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, வடக்கு போக் சாலை - விஜயராகவா சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.பொ.சி., சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று, பின் விஜயராகவா சாலையை அடைந்து, அங்கிருந்து அண்ணாசாலை வழியாக செல்லலாம் அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், விஜயராகவா சாலை நோக்கி வலது புறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு, போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தேனாம்பேட்டை பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன, அதன் காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.