ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் போட்டி! புதிய 'ஜாவா 42 பாபர் All Stars Edition' பைக் அறிமுகம்!
ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இப்போது பல நிறுவனங்கள் ஹெவி பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் ஜாவா எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம். ஏற்கனவே இந்த நிறுவனம் அறிமுகம் செய்து வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வரும் பைக்கான ஜாவா 42 பைக்கை இப்போது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டுவரப் போகிறது ஜாவா நிறுவனம். அப்டேட்டட் ஜாவா 42 பாபர் பைக்.
ஜாவா 42 பாபர் All Stars Edition என்ற பெயரிலான இந்த புதிய மாடலை பெங்களூருவில் நடந்த Global Chess League 2026 நிகழ்ச்சியில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிமுகம் செய்தார். மேலும், ஜாவா All Stars வரிசையில் Strike Two என்ற இரண்டாவது பதிப்பு என நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஜாவா 42 பாபர் All Stars Edition, அதன் தனித்துவமான Cantilever Seat வடிவமைப்பு மற்றும் பின்புற மோனோஷாக் அப்சார்பர் காரணமாக சந்தையில் தனித்துவமான தோற்றத்தை பெற்றுள்ளது.புதிய All Stars பதிப்பில் 42 Bobber-ன் அடிப்படை வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை செய்யாமல், அதன் தனித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய வண்ணத் தேர்வுகள், Chequered Graphics டிசைன் மற்றும் All Stars முத்திரை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க புதிய வண்ணத் தேர்வுகளில் ஒன்றாக All Stars Silver Knight குறிப்பிடப்படுகிறது.
புதிய Jawa All Stars 42 பாபர் மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 334cc லிக்யூடு கூல்டு DOHC engine பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 29.9 பிஎஸ் பவரையும், 30.01 என்எம் டார்க்கையும் முறையே 7,500 rpm மற்றும் 5,500 rpm-ல் வழங்குகிறது. எலெக்ட்ரிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் உடன் வரும் இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளில் டபுள் க்ரேடில் ஃப்ரேம், முன்புறத்தில் 35மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. முன்சக்கரம் மற்றும் பின்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 177 கிலோ எடையுடன், 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க், 1,485மிமீ வீல் பேஸ் மற்றும் 740மிமீ இருக்கை உயர அமைப்புடன் கிடைக்கிறது. முன்புறத்தில் 100/90-18 டயரும், பின்புறத்தில் 140/70 R17 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 145மிமீ ஆக உள்ளது.
புதிய ஜாவா 42 ஆல் ஸ்டார் எடிசன் ரூ.2,08,942 விலையிலிருந்து தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு 4 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வாரண்டி, 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 8 ஆண்டுகள் வரை சாலை அவசர உதவி திட்டம் மற்றும் 5 ஆண்டுகள் ஆண்டு பராமரிப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அந்நிறுவனம் வழங்குகிறது. நாடு முழுவதும் 450க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மூலம் இந்த சேவைகள் கிடைக்கும்.