×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை ( மார்ச் 26) கடைசி நாளாகும்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். மேலும், தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 தேதி கடைசி நாள். விதிகளின்படி வேட்பு மனு தாக்கல் இன் கடைசி நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.  


இதன்படி விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 26)  கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம். புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு  தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு துணை  வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை சுமார் 3.20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.