"தக்காளி ரூ.60... வெங்காயம் ரூ.80!": எகிறும் காய்கறி விலையால் இல்லத்தரசிகள் ஷாக்..!
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெளி மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வறட்சி காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் குறையும் பட்சத்தில் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல், பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80 வரை விற்பனை ஆகிறது.
சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். காய்கறிகளின் வரத்து மற்றும் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.