×

குறைந்தது தக்காளி விலை : சாமானியர்கள் நிம்மதி! 
 

 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாகவும் ,ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையினாலும்  தக்காளியின் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்தது.  தக்காளி விலை உயர்வு என்பது சாமானிய மக்கள் மட்டுமின்றி ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு பண்ணை பசுமை கடைகள்  மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.  அத்துடன் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றுவரை தக்காளி ரூபாய் 130க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  சில்லரை வணிகத்தில் 160 க்கு விற்பனையானது.

இந்த சூழலில் இன்று தக்காளி வரத்து சென்னையில் அதிகரித்ததன் காரணமாக தக்காளி கிலோ 40 ரூபாய் குறைந்து கோயம்பேடு சந்தையில் ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தக்காளி விலை குறைந்துள்ளது சாமானியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.