×

இன்றைய தங்கம் & வெள்ளி விலை: மளமளவென சரிந்த தங்கம்; வெள்ளி விலையில் மாற்றமில்லை!

 

உலகளாவிய பதற்றமான சூழல் காரணமாக கடந்த வாரத்தின் தொடக்கம் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஆதரவளிக்கும் விதமாக அமைந்தது. இதனால், தங்கத்தின் விலை வாரத்தின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்தது. இந்த சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்த காரணத்தால் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரித்தது. தொடர்ந்து உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சத்தையும் அது எழுப்பியது.

இதற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அமெரிக்க வேலை வாய்ப்புகள் பற்றிய தரவுகள் வெளியாகின. இது சந்தையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றும் வகையில் அமைந்தது. முக்கியமாக அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

ஆகையால், தங்கத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்து டாலரில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் விளைவாக தங்கத்தின் விலை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த காரணத்தினால் ஆகஸ்ட் 29, 31 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அப்படியே தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், தற்போது மீண்டும் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. இதன் விளைவாகவே கடந்த 3ஆம் தேதி 2 சதவீத உயர்வை தங்கம் சந்தித்தது.

நேற்று (செப்டம்பர் 6) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது