திரையுலகின் 'மகாகலைஞன்' விசுவின் பிறந்தநாள் இன்று! சம்சாரம் அது மின்சாரம் உருவான மாஸ் பிளாஷ்பேக்!
இயக்குநர் விசு எனும் மகாகலைஞனின் பிறந்ததினம் இன்று.
மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்பது தான் அவரின் இயற்பெயர் என்றாலும் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விசு என்றே அறியப்பட்டார். அந்த பெயரை கேட்டவுடன் நினைவில் வரும் இரண்டு அம்சங்கள் அவரின் கணீர் குரல் மற்றும் அவரின் எளிமையான ஆனால் வலிமையான வசனங்கள் தான்.
கே. பாலச்சந்தர் படங்களில் ஜொலித்த பல வசனங்களுக்கும் விசு தான் சொந்தக்காரர் என்பது பலரும் அறியாத ஒன்று. குறிப்பாக என்றுமே நினைவில் நிற்கும் தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் - ரஜினியிடையே நடைபெற்ற ஸ்வாரஸ்யமான உரையாடலுக்கு காரண கர்த்தா விசு தான். தனது நாடகபாணியை எந்த இடத்திலும் தவற விடாத விஸ்வாசமான கலைஞர் விசு. தனது படங்களில் குடும்ப சென்டிமென்டை கையில் எடுத்து அதில் வித்தியாசமான வசனங்களால் விளையாடியவர். அவர் சொல்ல வரும் மிகவும் ஆழமான கருத்துக்களை கூட மிகவும் எளிமையான வசனங்கள் மூலம் எளிமையாக மக்களிடையே கொண்டு சேர்க்க கூடியவர். அதன் சான்றுகள் தாம் சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, டௌரி கல்யாணம் போன்ற படங்கள்.
இவருடைய திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும். 'உழைப்பாளி', 'மன்னன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வசனகர்த்தா, கதாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு வெளியான 'அலெக்ஸ்பாண்டியன்' படத்தில் விசு நடித்திருந்தார். இவருக்கு மனைவி உமா, மகள்கள் லாவண்யா, சங்கீதா, கல்பனா உள்ளனர்.
சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கு முன்பு அவள் சுமங்கலி தான், புதிய சகாப்தம், கெட்டிமேளம் என மூன்று தோல்விப் படங்களை எடுத்திருந்தார் விசு. அதிலும் புதிய சகாப்தமும் கெட்டிமேளமும் மோசமான தோல்விகளைச் சந்தித்தன. ஆனாலும் ஏ.வி.எம்., விசுவை வைத்துப் படம் எடுக்க நினைத்தது.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் விசு. படம் வெற்றி பெற்றதால் சொன்ன சம்பளத்தை விடவும் அதிகமாகக் கொடுத்தார் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம்.மில் ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் என்று கூறினார் விசு.
இந்தமுறை சரியாக எடுக்கலாம் என நம்பிக்கையளித்தார் விசு. அவருடைய திறமையை நம்பி சம்மதம் சொல்லினார் சரவணன்.
உறவுக்கு கை கொடுப்போம் படத்தின் உரிமையை கே.எஸ்.ஜி-யிடமிருந்து வாங்கினார் விசு. அவருக்கும் ஆச்சர்யம். நீங்கள் ஏமாறப்போகிறீர்கள் என்று சொல்லி உரிமையை வழங்கினார். கடைசியில் இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தியில் மட்டும் சுமாராக ஓடியது. இப்படி விசு சொல்லி அடித்த ஒரு படம்தான் சம்சாரம் அது மின்சாரம்.
1975-ல் வெளியான படம் உறவுக்கு கை கொடுப்போம். இந்தப் படத்தின் கதை, முதலில் மேடை நாடகமாக வெளிவந்தது. அதைப் பார்த்த தயாரிப்பாளர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (கே.எஸ்.ஜி.), மேடையிலேயே ரூ. 300 அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டார். ஒய்.ஜி. மகேந்திரன் இயக்கத்தில் (திரைக்கதை, வசன, இயக்கம் மேற்பார்வை - கே.எஸ். கோபாலகிருஷ்ணன்) ஜெமினி, சௌகார் ஜானகி, தேங்காய் சீனிவாசன் நடித்த அந்தப் படம் தோல்வியடைந்தது. மக்களிடம் வரவேற்பு பெறாத இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் விசு. இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார் ஏ.வி.எம்.சரவணன்.
நாடகதன்மை கொண்ட வசனங்கள் என்றாலும் அதில் யதார்த்தத்தை கலந்து வெற்றி கண்ட வித்தகர் என்றால் அது மிகையல்ல. இன்றும் விசுவின் தீவிர ரசிகர்கள் மறக்கமுடியாத காட்சியாக கருதப்படுவது சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இடம் பெற்ற ரகுவரன் - விசு இடையே நடைபெறும் காரசாரமான விவாதம். இந்த படம் பல தசாப்தங்கள் தாண்டி டிவியில் போட்டாலும் 2கே கிட்ஸ் வரை ரசித்து பார்க்கும் அளவுக்கு இருக்கும். விசுவின் படைப்புகளில் இருக்கும் ட்ரேட்மார்க் என்னவென்றால் அவரின் படங்களில் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் நிச்சயமாக இடம் பெற்று இருப்பார்கள்.
அந்த பட்டியலில் மனோரமா, எஸ்.வி.சேகர், அவரின் சகோதரர் கிஷ்மு, திலீப், டெல்லி கணேஷ், கமலா காமேஷ், கோகிலா, இளவரசி போன்றவர்கள் ஏதாவது ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் அவரின் படங்களை அலங்கரிப்பார்கள். அதே போல அவருக்கு மிகவும் பிடித்த உமா என்ற பெயர் நிச்சயம் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக இருக்கும். இதை எதையும் அவர் யாருக்காகவும் மாற்றிக் கொண்டது கிடையாது. பட்ஜெட் படங்களுக்கு சிறப்பான தேர்வு விசு தான். மிகவும் உணர்ச்சிகரமான காட்சியாக இருந்தாலும் அதை ஒரே ஷாட்டில் அசால்ட்டாக முடிக்க கூடியவர். நெருக்கடிகளே அவரின் பலத்தை பன்மடங்காக பெருகியது.
தமிழ் ரசிகர்களை தனது வசனத்தால் கட்டிப்போட்ட விசு உலகளவில் மக்களை தான் பக்கம் கவனம் ஈர்க்க செய்தது விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி.
இந்த ஆகசிறந்த கலை சிற்பியின் 78வது பிறந்தநாள் இன்று. திரையுலகில் வசனங்கள் உள்ளவரை விசுவின் பெருமைகளும் படைப்புகளும் நிச்சயமாக பேசப்படும்.