இன்று கேரளாவில் பிறவி தினம்,கர்நாடகாவுக்கு ராஜ்யோத்சவா.. தமிழ்நாடு நாள் மட்டும் ஏன் ஜூலை 18 ?
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950ல் நாடு குடியரசானது. இதன்படி இந்தியாவிலிருந்து எந்த மாநிலமும் பிரிய முடியாது. ஆனால் மாநிலங்களுக்குள் பிரிந்துக்கொள்ளலாம், அல்லது சேர்ந்துக்கொள்ளலாம். எனவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்தது. இதனால் மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட அப்போதைய தமிழ்நாட்டின் தென் கடற்கரை பகுதி கேரளாவாகவும், வட பகுதி ஆந்திரா/கர்நாடகாவாகவும் பிரிந்தது. இது 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நடந்தது.
எனவே மேற்குறிப்பிட்ட மாநிலங்கள் தங்கள் மாநில நாளை, ஆண்டுதோறும் நவ.1ம் தேதி கடைபிடித்து வருகின்றன. ஆனால்.. தமிழ்நாட்டிற்கு இந்த கணக்கு கிடையாது. தமிழ்நாட்டை பொறுத்த வரை நிலம் பிரிக்கப்பட்டிருக்கிறது. எனவே அடிப்படையில் மாநில நாள் என்பதையே தமிழ்நாடு அரசு கொண்டாடுவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, இனி நவம்பர் மாதம் 1ம் தேதி மாநில தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு அப்போதே சில எதிர்ப்புகள் எழுந்தன. நிலத்தை இழந்த நாளை, மாநில நாளாக கொண்டாட முடியாது என தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் கடந்த 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு, இனி ஜூலை மாதம் 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதற்கான காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், "1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்" என்று விளக்கமளித்திருந்தார். பின்னர் இது குறித்து முழுமையான அரசாணை வெளியானது.
நவம்பர் 1ம் தேதிதான் உண்மையான தமிழ்நாடு நாள் என பாமக, நாதக உள்ளிட்டகட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அரசாணையை இக்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மெட்ராஸ் மாகாணத்திற்கு பெயர் சூட்டிய நாளை எப்படி, மாநில தினமாக கொண்டாட முடியும்? சூட்டப்பட்ட பெயர் கூட இரண்டு நாள் கழித்துதான் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் தமிழர் உணர்வுகளை மழுங்கடிக்கவே ஜூலை 18-ஐ தமிழ்நாடு நாள் என அரசு அறிவித்திருப்பதாக விமர்சித்திருந்தன. இப்படி மாநில தோற்றம் குறித்து பஞ்சாயத்து வெடிக்கும் போதெல்லாம்.. தமிழ்நாடு பெயர் சூட்டல் குறித்த சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அவர் உரையாற்றியது நினைவுக்கு வருகிறது. 1967ல் அக்டோபர் மாதம் 31ம் தேதி அண்ணாதுரை, தமிழ்நாடு என்கிற பெயர் மாற்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தன. தனது உரையில், "நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறியிருந்தார்.