×

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..! இந்த காலத்தில் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை..!

 

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது. சந்திரன் சஞ்சாரம் இந்த ஆண்டு 4-5-2026 முதல் 28-5-2026 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும். தலையில் படும் நேரடி வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படும். எனவே அவசிய தேவையின்றி மக்கள் பகல் பொழுதில் வெளியே வருவதை தவிர்க்கலாம். மேலும் பழங்கள், தண்ணீர், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாத குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அருந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது குடையை எடுத்து செல்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அக்னி நட்சத்திர காலத்தில் சுப காரியங்களை எதுவும் செய்யக் கூடாது என்ற கருத்து பல காலமாக மக்களிடம் இருந்து கொண்டு இருக்கிறது. முந்தைய காலத்தில் மின்சார வசதி இல்லாததால், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் சுப காரியங்கள் நடத்தினால் அதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது என நமது முன்னோர்கள் நினைத்தனர்.

தற்போது மின்சார வசதி, குளிர்சாதன வசதிகள் பெருகி விட்டதால் அக்னி நட்சத்திர காலங்களில் சுபகாரியங்களை நடத்துகிறார்கள். ஆனால் சூரியனின் தாக்கம் அதிகம் இருக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, குழந்தை பாக்கியம், தேக ஆரோக்கியம், மனக்குழப்பத்தில் இருந்து விடுபடுவது, கிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி, தலைமை பதவி ஆகியவற்றை அளிக்கக் கூடியவர் சூரியன் பகவானே.

குடும்பத்தின் தலைவனாக இருக்கும் சூரியன் உக்கிரமாக காணப்படும் இந்த காலத்தில் சுப காரியங்கள் செய்வதால், சூரியனின் அருள் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் என்பதால் அக்னி நட்சத்திர காலத்தில் சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த காலத்தில் சில குறிப்பிட்ட சுப காரியங்களை செய்ய தடையில்லை என்றும் சொல்லப்படுகிறது. சில மாதங்கள், திதி, கிழமையில் சில காரியங்களை தவிர்க்க வேண்டும் என நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அப்படி அக்னி நட்சத்திர காலத்தில் எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடாதவை :

* வீடு கட்டுமான பணிகளை துவக்குவது

* கிணறு வெட்டும் பணிகளை துவக்குவது

* பூமி பூஜை செய்வது

* விவசாயத்திற்கான விதைப்பு வேலைகள் செய்வது

* மரம் வெட்டுதல்

* குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்துதல்

* கிரகப்பிரவேசம்

* பந்தக்கால் நடுவது

* தெய்வ திருவுருவங்களை பிரதிஷ்டை செய்வது.

​அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய ஏற்றவை :

* திருமணம்

* நிச்சயதார்த்தம்

* வளைகாப்பு

* பெண் பார்த்தல்

* ஏற்கனவே கட்டி கிரகப்பிரவேசம் செய்த வீட்டிற்கு குடி போகலாம்.

* வாடகை வீடு மாறுவது

* உபநயனம் செய்வது.

* சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தலாம்.

* சுப காரிய ஏற்பாடுகளை துவங்கலாம்