×

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள்:  புதிய அறிவிப்பு வெளியாகுமா..? 

 

முதல்வராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய் அவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் இன்றும் பல உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் இன்று அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.

முதலமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

முன்னதாக நேற்றே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கியது. முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான கபடி போட்டி மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது. இதனை அமைச்சர் நிர்மல்குமார் தொடங்கி வைத்தார்.தேனி மாவட்டம் கம்பத்தில் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் நல விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி, துறையூர், முசிறி ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.அரியலூர் ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 6 கிலோ மீட்டர் தொலைவிற்கான மாரத்தான் போட்டியினை காவல் ஆய்வாளர் வேலுசாமி துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வண்டலூர் உள்ளிட்ட 3 உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து அமைச்சர் ரஞ்சித் குமார் கூறுகையில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய உயிரியல் பூங்காக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் நுழைவுக் கட்டணம் இல்லாமல், வழக்கமான முறையில் இணைய வழியாக நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இன்று (ஜூன் 22) அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணத்தை த.வெ.க. சார்பாக வனத்துறை அமைச்சரான நானும், எனது சகோதர்களும் குடும்ப அறக்கட்டளையும் அரசுக்கு முழுமையாகச் செலுத்தி விடுவோம். இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணச் செலவு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.