×

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு! முதல்நிலை தேர்வு தேதி அதிரடி மாற்றம்..!

 

குரூப் 1 பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

அப்போது வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - குரூப் 1க்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. மேலும், முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 30 ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திறந்தது. இந்த மாதம் 29ஆம் தேதி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 முதல் நிலைத்தேர்வு குறிப்பிட்ட அந்த நாளில் நடைபெறாது என்றும், அத்தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு I (தொகுதி I பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6 நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத் தேர்வானது செப்டம்பர் 27 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டு உள்ளது.

 

குரூப் 1 தேர்வின் வாயிலாக, துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 12 இடங்கள், வணிக வரித்துறை உதவி ஆணையர் பதவியில் காலியாக உள்ள 2 இடங்கள், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பதவியில் காலியாக உள்ள 3 இடங்கள், தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் மாவட்ட பதிவாளர் பதவியில் காலியாக உள்ள 8 இடங்கள், தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆணையர் பதவியில் காலியாக உள்ள 1 இடம் என மொத்தம் 26 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.