×

வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு - கல்குவாரியை நிரந்தரமாக மூட தினகரன் வலியுறுத்தல்!!
 

 

விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் விபத்திற்கு காரணமான கல்குவாரியை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதி ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் வெடிபொருட்கள் வைத்திருந்த அறையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.  

வெடிவிபத்து நிகழ்ந்த கல்குவாரி, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அக்குவாரியை மூட வலியுறுத்தி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

வெடி விபத்தின் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கும் குடியிருப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதோடு, விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

மேலும், 3 அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு காரணமான காரியாபட்டி கல்குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் இயங்கிவரும் கல்குவாரிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.