×

"ஜெயலலிதா மர்ம மரணம்; மக்களுக்கு உண்மையை சொல்வது கடமை" - தமிழக அரசு திட்டவட்டம்!

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கடந்த ஐந்து வருடமாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என யாருக்குமே தெரியவில்லை. இதற்காக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு ஏற்படுத்தியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து உச்ச நீதிமன்றத்தில் விலக்கு கேட்டு மேல் முறையீடு செய்துள்ள அப்பல்லோ நிர்வாகம்.

நீதிமன்றம் மருத்துவர்கள் ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் பாரபட்சமாக ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர்களை விசாரிக்கும் ஆணையத்தில் ஒரு மருத்துவ நிபுணர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தது. இச்சூழலில் இம்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடுகையில், "ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டுமே. உச்ச நீதிமன்றம் விரும்பினால் மருத்துவரை நியமிக்க தயார். ஆனால் மருத்துவர் தேர்வு விவகாரத்தில் அப்பல்லோ தலையிடக் கூடாது. 

திரட்டப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அரசு சட்டப்பேரவையில் கூடி முடிவெடுக்கும். ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியது எங்களது கடமை. அப்பல்லோ என்ன மாதிரியான மருந்துகளை கொடுத்தது, என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்பட்டது போன்ற அடிப்படை தரவுகள் முழுமையாக வேண்டும். இதற்கு நிபுணர்கள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் நீதிமன்றம் விரும்பும் பட்சத்தில் மருத்துவர்கள், நிபுணர்கள் போன்றோரை இணைத்து இந்த ஆணையத்தை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறப்பட்டது.