×

"கருணாநிதி சிலை வைக்க அனுமதி கொடுக்கவில்லை" - அரசு ஹைகோர்ட்டில் விளக்கம்!

 

பொது இடங்களில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டுமென்றும், அனுமதி பெற்று வைக்கப்பட்ட சிலைகளை பராமரிக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஏ.திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், "திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகமாக நடந்துவருகிறது. 

தற்போது அந்த இடத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் சிலையை வைக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை ஏற்கெனவே நிலுவையில் இருந்த வழக்குடன் ஒன்றாக சேர்த்து விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலரும், திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "அந்த இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கோரி திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ க.செல்வராஜ் அளித்த மனுவை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்றே நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை முடித்துவைத்து ஆணையிட்டார்.