×

அனைவருக்கும் தனித்தனி இமெயில் ஐடி... அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி! 

 

தமிழ்நாட்டில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. முன் ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக ஒவ்வொரு அரசு அமைப்புகளும் அதிவேகமாக இயங்கும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பித்தார். வெவ்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும் புதிய முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். 

தற்போது மாநிலத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தனித்தனியாக பிரத்யேகமான மின்னஞ்சல் முகவரி (இமெயில் ஐடி) வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்குரிய அறிவிப்பை நடந்துமுடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு துறை நிர்வாகங்களை மேம்படுத்தும் விதமாக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்படி இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்தேயகமாக மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும். 

அனைத்து அரசு ஊழியர்களும் தங்களுக்கான மின்னஞ்சல் முகவரி மூலம் எல்லா விதமான தகவல்களையும் அரசுக்கு தெரிவிக்கலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனித்தனி இமெயில் ஐடி வழங்குவதன் மூலம் அரசு நிர்வாகம் மேம்படும் என்றும் அரசுத் துறைகளில் ஏற்படும் பிரச்சனைகள் உடனே கண்டறியப்பட்டு அதனை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல் பரிமாற்றம் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்றும் இதனால் அரசு  எந்திரம் வேகமாக இயங்கும் எனவும் கூறப்படுகிறது.