×

மெரினா செல்ல தடை... ஏன் இந்த திடீர் முடிவு? - பகீர் பின்னணி!

 

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு சாதாரண தேர்வுகள் முதல் செமஸ்டர் தேர்வுகள் வரை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வருகின்றன. கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்டதால் நேரடி தேர்வு நடத்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தீர்மானித்துள்ளன. 

ஆனால் மாணவர்கள் மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்திவிட்டு, தேர்வை நேரடியாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல என மாணவர்கள் கூறுகின்றனர். இதனை வலியுறுத்தி மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் தேர்வுகளைப் புறக்கணிப்போம் என்றும் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்தது. வழக்கும் பதிவு செய்தது. 

இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, நேரடி தேர்வை ஜனவரி 20ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். ஆனால் இதற்கு உடன்படாமல் சென்னை மாணவர்கள் இன்று மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பொதுமக்கள் மெரினா வருவதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.