×

"வன்னியர் இடஒதுக்கீடு ரத்து" - தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!

 

கடந்த அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் எம்பிசிகளுக்கான் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அப்போதே பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தேர்தல் கூட்டணி கணக்குக்காக வன்னியர்கள் ஓட்டுக்களுக்காக பிற சாதி மக்களை வஞ்சிக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக எம்பிசி பிரிவில் இருக்கும் சீர்மரபினர் உள்பட 68 சாதிகள் இந்த இடஒதுக்கீட்டால் பெரிதும் பாதிப்படைவார்கள் என போராட்டம் நடத்தினர். 

அதேபோல உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்துசெய்தது. அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என பாமகவினர் வலியுறுத்தினர். ஆனால் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என பிற சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இருப்பினும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சொன்னதுபோலவே இன்று தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அதில், 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு மட்டுமில்லாமல் அதில் 7 பிரிவினருக்கும் 10.5% இடஒதுக்கீடு அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.