×

"இனி ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரைக்கு செல்லலாம்” - கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில்  கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வார இறுதி நாட்களில் கோயில்களை திறப்பது, பண்டிகை காலத்தையொட்டி இப்போதைய நிலையே தொடர்வதா உள்ளிட்ட  பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி தற்போது கூடுதல் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கடற்கரைக்குச் செல்லலாம் என கூறியுள்ளது. பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த கடைகள், ஹோட்டல்கள் இன்று முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் முழுமையாக செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அதேசமயம் காப்பாளர்கள், சமையலர்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் பங்குபெற 100 பேருக்கு அனுமதி. இறப்பு சார்ந்த சடங்குகளில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடர்வதாக கூறியுள்ளது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.