×

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழ்நாடு ஆளுநர் நியமனம்!

 
புதுச்சேரியிலுள்ள ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைவராக இருந்த முன்னாள் எம்பி கரண்சிங் பதவிக்காலம் கடந்தாண்டு முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி ஆரோவில் அறக்கட்டளை தலைவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி மகாத்மா காந்தி பட்டமேற்படிப்பு மையத்தைச் சேர்ந்த டாக்டர் நிர்மா ஓசா, எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன், மேற்கு வங்க பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் கோஷல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஐதராபாத் பல்கலைக்கழக தலித் ஆதிவாசி துறைத்தலைவர் சர்ராஜூ, கர்நாடக பல்கலைக்கழக அரசியல் அறிவியல் படிப்புத்துறை பேராசிரியர் நந்தன கவுரப்பா பசப்பா மற்றும் கல்வி அமைச்சகத்தின் 2 செயலர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்தான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சக உயர்கல்வி பிரிவு இணை செயலர் நீடா பிரசாத் வெளியிட்டுள்ளார். புதிய குழு விரைவில் கூடி ஆரோவில் சர்வதேச நகரின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.