அமலாக்கத்துறை சோதனைகளில் 95% எதிர்க்கட்சிகளை சார்ந்ததாகவே இருந்துள்ளது - கே.எஸ்.அழகிரி
பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளில் 95 சதவிகிதம் எதிர்கட்சித் தலைவர்களை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளில் 95 சதவிகிதம் எதிர்கட்சித் தலைவர்களை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இதை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் இத்தகைய நிறுவனங்களின் பழிவாங்கும் போக்கை தடுத்து நிறுத்த வழக்கு தொடுத்துள்ளன. அந்தளவிற்கு அமலாக்கத்துறை எதிர்கட்சிகளை பழிவாங்க சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைப்பது, மனஉளைச்சலை ஏற்படுத்துவது, அரசியல் ரீதியாக அவர்களை செயல்பட விடாமல் முடக்குவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது.