×

செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை - முதலமைச்சர் வெளியிட்டார்

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீப காலமாக எம்.சேண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற எம்.சேண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கண்காணித்திடவும் எம்.சேண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் கொள்கை ஒன்று தேவைப்படுகிறது.

தலைமுறைகளுக்கிடையேயான சமபங்கு கொள்கையினை உலக அளவில் ஏற்றுக் கொள்ளும் சூழலில் ஆறுகள், காடுகள், கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை மனித இனத்தின் ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறைகளின் நலனுக்காக பாதுகாக்க வேண்டி செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை 2023 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இன்றைய தேதியிலிருந்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.