“ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன், குட்டி கதை சொல்லாமல் கேள்விக்கு பதில் சொல்லுங்க”- உதயநிதி ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அதிகாரிகள் மீது தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. முன்பு ‘ஆணவப் படுகொலை எனக் கூறிவந்த நிலையில், இந்த ஆட்சியில் ‘கௌரவக் கொலை’ என மாற்றியிருக்கிறார்கள். இன்னும் சில பத்திரிகைகளில் ‘காதல் மரணம்’ என்கிறார்கள். கடந்த காலங்களில் ஆட்சியை குறைகூறியவர்கள், இப்போது தனிமனித ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கிறார்கள். தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.
இந்த அரசு கொடுத்துள்ள கொள்கை விளக்க குறிப்பில், திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதை தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டைக் காட்டிலும் 2025ம் ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்களில் உங்கள் அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளீர்கள். திமுக ஆட்சியில் டாப் கியரில் தமிழ்நாடு சென்றது தவெக ஆட்சியின் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. 116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது. கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது. உங்களிடம் கேள்வி கேட்டு சரியான பதிலைப் பெற வேண்டிய பொறுப்பை மக்கள் கொடுத்துள்ளனர். ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன், குட்டிக் கதை சொல்லாமல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இன்னும் திமுகதான் ஆட்சி செய்கிறது என்ற நினைப்பை எடுத்துவிட்டு முதல்வர் பதிலளிக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அதிகாரிகள் மீது தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்” என்றார்.