×

இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதி -  சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!!

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று சட்டபேரவை கூட்டத்தொடர்  தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவுஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். 

இதை தொடர்ந்து சட்டப்பேரவை இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் தொற்றை  தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  சமீபத்திய ஆய்வு முடிவின்படி நாட்டின் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  சென்னை உள்ளிட்ட நகரங்களில் முன்பு  எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இருப்பினும் நீர்த்தேக்கங்களில் இருந்து முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.  அத்துடன் இஸ்லாமியர்கள் , கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கான  நலத்திட்ட உதவிகள் தொடரும்.  தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வழிவில் சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் காக்கப்படும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழகத்தை உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மேம்படுத்தப்படும் , அரசு பள்ளிகளை நவீனமாக மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் மாபெரும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்படும். பொருளாதார மேம்பாட்டிற்காக சாலைகளை மேம்படுத்தி வருகிறது தமிழக அரசு என்றும் குறிப்பிட்டிருந்தார்.  அத்துடன் இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் . நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துக்குள்ளான 4,482 பேருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது , கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது; முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும்; கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும், சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும்,  ’இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது, நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது" என்று கூறியுள்ளார். 

இறுதியாக வாழிய செந்தமிழ், வளர்க நற்றமிழர் ,வாழிய பாரத மணித்திரு நாடு என்ற பாரதியின் வரிகளுடன் ஆளுநரின் உரை நிறைவு பெற்றது.  நன்றி, வாழ்க தமிழ் என்று சட்டப்பேரவையில் தனது 42 நிமிட  உரையை ஆளுநர் ஆர் என் ரவி நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.