×

“பேரவையில் ‘காணோம், காணோம்’ என சொல்கின்றனர்...லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மு.க. ஸ்டாலினை காணலாம்”- சேகர்பாபு

 

19,000 கோயில்களுக்கு இலவச மின்சாரம், அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கியது திமுக அரசு என திமுக MLA சேகர்பாபு கூறியுள்ளார்.

அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், உரையாற்றிய திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு, “சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கினோம் என்றும், ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்றும் பறைசாற்றினார். தற்போது முதலமைச்சர் விஜய், துறையின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் ஆக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆட்சியிலேயே 200 ஆண்டுகளுக்கு பழமையான துறை சார்ந்த 4,000 பக்கங்கள் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தில் கோட்டைக் கொத்தளத்தில், 2021-ம் ஆண்டு கொடியேற்றிப் பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நெஞ்சில் தைத்த முள், கலைஞர் அவர்கள் போராடிப் பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கினோம். அன்னைத் தமிழில் அர்ச்சனை என பறைசாற்றினார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகள்.

திராவிட மாடல் ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்து, அதில் 4 கல்லூரிகளைத் திறந்துவைத்தோம். கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டக்கூடாது என வழக்குத் தொடர்ந்து தடுக்க நினைத்தவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, 4 கல்லூரிகளைக் கட்டி முடித்துள்ளோம். மீதமுள்ள கல்லூரிகளையும் கட்டி முடிக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா? சட்டப்பேரவையில் அடிக்கடி ‘காணோம்... காணோம்...’ என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதை கேட்க முடிகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, சூரியனை வானத்தில் காணலாம். சந்திரனை நட்சத்திரங்களுக்கு நடுவில் காணலாம். ஆண்டவன் எங்கே என்றால், ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என்பார்கள். அதுபோல், பசி போக்கும் அன்னதானத் திட்டம், கட்டணமில்லா இலவச திருமணம், விளக்குப் பூஜை, மருத்துவமனை வசதிகள் என எங்கெல்லாம் லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் பயன்பெற்றார்களோ, அங்கெல்லாம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைக் காணலாம்! 19,000 கோயில்களில் விளக்கேற்றி வைத்து, அந்தக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிய அரசு திராவிட மாடல் அரசு. ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் 2,000 அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்பட்டது. மேலும், ரூ.8,000 கோடி மதிப்பிலான 8,147 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.” என்றார்.