×

நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி -  கூட்டத்தொடரில் ஆளுநர் உரை !!

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று சட்டபேரவை கூட்டத்தொடர்  தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத் தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது . சட்டப்பேரவைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன்  பின்னர் ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். ஆளுநர் ஆங்கிலத்தில் உரையை வாசிக்க, அதை சபாநாயகர் அப்பாவு தமிழில் மொழிபெயர்த்து வாசித்து வருகிறார். 

அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு இந்தியாவிற்கு மட்டுமல்ல தெற்காசியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.சுயமரியாதை ,சமூக நீதி சமத்துவம், பகுத்தறிவு, அன்புடமை போன்ற தத்துவங்கள் இந்த அரசு கடைப்பிடித்து வருகின்றது பெரியார், அம்பேத்கர், காமராஜர் ,அண்ணா ,கலைஞர் ஆகிய உன்னதமான தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடங்களை தீர்மானிக்கின்றன. 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் திட்டம்' மூலம் தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். 

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் இதோ :- 

மேகதாது அணை கட்ட கர்நாடகாவை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது 

நீட் தேர்வு தேவையில்லை  என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது.நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

புதிய அரசு அமைந்த பிறகு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடந்தது முடிந்தது; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் தொடரும்

இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு  உறுதியாக உள்ளது.

இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்.

கொரோனா 2ஆம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்; பாதியில் பள்ளியை நிறுத்திய 73,000 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்னர். 

150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்கா; தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் ஃபர்னிச்சர் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்