“நம்ம நாட்டுல தேசிய மொழினு ஒன்னு கிடையாது..”- டி.எம்.கிருஷ்ணா பேட்டி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது அநீதி எனத் தெரிவித்துள்ள கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இதற்கு எதிராக மக்கள் போராட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் கலையரங்கத்தில் கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, “மாநில அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது அநீதி, மக்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த இந்த அரசை செயல்பட விடாமல், தடுப்பதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.
மக்களுக்கு என்ன தேவை என்பது மாநில அரசுக்கு தான் தெரியும். அந்த ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அந்த ஜனநாயக உரிமையை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இந்த அநீதியை எதிர்த்து மக்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் பேச வேண்டும். அதேபோல எல்லா மொழிகளுக்கும் தனி அழகு, வரலாறு, வடிவம், உண்டு. தேசிய மொழி என்று ஒன்று இல்லை, அலுவலக மொழி என்றுதான் உள்ளது” என்றார்.