திருவள்ளூர் ரயில் விபத்து - 46 மணி நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது ரயில் சேவை..!!
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை 46 மணி நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி) இருந்து பெங்களூரு நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் கடந்த ஞாயிறு அன்று (ஜூலை) அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இங்கிருந்து வழக்கமாக ரசக்கு ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எரிபொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 52 டேங்கர்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்தும் டீசல் டேங்கர்கள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததோடு, விண்ணை முட்டும் அளவுக்கு வானுயர புகை எழுந்து காட்சியளித்தது.
தீ மளமளவென எரிந்த நிலையில், அதிக வெப்பமாகவும் இருந்ததால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இருப்பினும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இணைந்து, தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தும் ஃபோம் ( ரசாயன நுரை) கொண்டு 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மொத்தமாக 52 டேங்கர்களை ஏற்றி வந்த நிலையில், 18 டேங்கர்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. 5 டேங்கர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு டேங்கரில் 70,000 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்த நிலையில், இந்த தீ விபத்தில் 18 டேங்கர்களில் இருந்த 12.6 லட்சம் லிட்டர் டீசல் தீக்கிரையானதாகவும், இதுவரை ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.