×

பேராசிரியருக்கும் மாணவிக்கும் காதல் ; எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி – இன்னொரு சாத்தான்குளமா திருத்தணி காவல் நிலையம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நல்லாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரின் மகள் மணிமேகலை (24) இவர். அரக்கோணத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் பஸ்சில் மணிமேகலை கல்லூரி சென்று வந்தார். அப்போது அதே பஸ்சில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், தாழவேடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் வந்துள்ளார். இவர், மணிமேகலை படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரே பஸ்சில் பயணித்ததால் ராஜ்குமாருக்கும் மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்
 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நல்லாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரின் மகள் மணிமேகலை (24) இவர்.
அரக்கோணத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் பஸ்சில் மணிமேகலை கல்லூரி சென்று வந்தார். அப்போது அதே பஸ்சில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், தாழவேடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் வந்துள்ளார். இவர், மணிமேகலை படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரே பஸ்சில் பயணித்ததால் ராஜ்குமாருக்கும் மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் மணிமேகலைக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதனால் ராஜ்குமாருக்கு மணிமேகலை தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிமேகலை கூறியுள்ளார். ஆனால் ராஜ்குமார், மணிமேகலையை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த 11.06.2020-ல் தாழவேடு கிராமத்தில் உள்ள ராஜ் குமார் வீட்டிற்கு மணிமேகலை சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரமாக மணிமேகலையைக் காணவில்லை என்றதும் அவரின் குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது மணிமேகலை தாழவேடு கிராமத்தில் இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. உடனே மணிமேகலை குடும்பத்தினர் அங்குச் சென்றுள்ளனர். அப்போது மணிமேகலையிடம் வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளனர். அதற்கு மணிமேகலை சம்மதிக்கவில்லை. இந்தச் சமயத்தில் ராஜ்குமாரின் உறவினர்கள் மணிமேகலையின் குடும்பத்தினரை அவமானப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். அவரும் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசியதாக மணிமேகலையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அதன்பிறகு மணிமேகலையை அழைத்துக் கொண்டு அவரின் குடும்பத்தினர் வீடு வந்துள்ளனர். ஆனால் மணிமேகலை மனவேதனையில் இருந்தார். இந்தச்சமயத்தில் அவர் 13.6.2020-ல் எரிந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு மணிமேகலையில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை மணிமேகலை வழக்கில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மணிமேகலையின் குடும்பத்தினர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனிடம் மனு கொடுத்துள்ளனர். அதன்பிறகு இந்தச் சம்பவத்தை விசாரணை நடத்தும்படி திருத்தணி டிஎஸ்பி சேகருக்கு எஸ்.பி அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகும் மணிமேகலையின் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மணிமேகலையின் அம்மா புவனேஸ்வரி கூறுகையில், திருத்தணி காவல் நிலையத்திலிருந்து தங்களுக்கு வேண்டப்பட்ட எஸ்ஐ ஒருவரை போன் செய்து ராஜ்குமாரின் குடும்பத்தினர் வரவழைத்தனர். அங்கு வந்த எஸ்.ஐ, வீட்டுக்குள் சென்று பேசிவிட்டு என்னையும் என் மகளையும் தலைமுடியை பிடித்து தாக்கினார். அப்போது அவரும் எங்களை தரக்குறைவாக பேசினார். இந்த இடத்திலிருந்து செல்லவில்லை என்றால் மகளிர் போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என மிரட்டினார். அதனால் என் மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த மணிமேகலை மனவருத்ததில் இருந்தார். சாப்பிடாமல் இருந்தவளை சமரசப்படுத்தி சாப்பாடு கொடுத்தோம். அதன்பிறகு அன்றைய தினம் அனைவரும் தூங்கிவிட்டோம். மறுநாள், காலையில் தம்பியை பார்த்து மணிமேகலை சிரித்துள்ளார். பின்னர்தான் அவர் ஆற்றாங்கரையில் எரிந்த நிலையில் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. என் மகள் மணிமேகலை மரணத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. நான் என் மகளை பொத்தி பொத்தி வளர்த்தேன். எங்கள் வீட்டு கூண்டில் அவள் சந்தோஷமாக இருந்தாள். நான், இட்லி விற்று அவளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். இட்லி விற்க ஊர், ஊராக சுற்றி என் கால்கள் தேய்ந்துவிட்டது. என் மகள் தெளிவானவள். அதனால் அவள் தவறான முடிவை எடுக்க மாட்டாள். என் மகள் மரணத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை. எங்களுக்கு ஆதரவு யாருமில்லையே. காவல்துறையினர் நியாயமாக நடந்திருந்தால் என் மகள் இறந்திருக்க மாட்டாள் என்று கண்ணீர்மல்க கூறினாள்.

 

மணிமேகலை மரணத்துக்கு நீதிகேட்டு அவரின் குடும்பத்தினரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணி காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேராசிரியருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால் இன்று மாணவி மணிமேகலை உயிரோடு இல்லை. அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் நான் ரொம்ப பீல் பண்ணிய நாள்தான் இது. நான் அதிகம் காதலிக்கும் நபர் என்னுடைய நெருங்கிய தோழி என்னைப்பற்றி தவறாக பேசிவிட்டாள். அவளை நான் வெறுக்கிறேன். அதே நேரத்தில் நான் அதிகம் நேசிப்பவர் ராஜ்குமார். அவர் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்டில் பேராசிரியராக இருக்கிறார். செல்லம், லவ்லி பாய், சாக்லெட் பாய், க்யூட் பாய், அதனால் அவரை ரொம்பவும் காதலிக்கிறேன். நான் அவரை மறக்க மாட்டேன். ஐலவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிமேகலை வழக்கு குறித்து திருத்தணி டி.எஸ்.பி சேகரிடம் விளக்கம் கேட்க போனில் பேசினோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அதன்பிறகு திருத்தணி இன்ஸ்பெக்டருக்கும் போன் செய்த போது அவரும் பதிலளிக்கவில்லை. இருவரின் விளக்கத்தையும் வெளியிட தயாராக உள்ளோம்.

பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று நம்மிடம் பேசிய திருத்தணி போலீசார், மணிமேகலை மரண வழக்கில் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இங்குள்ள காவல்துறை அதிகாரிகள் சிலரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இங்குள்ள காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது தொடர்ச்சியாக எஸ்.பி அலுவலகத்துக்கு புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அதிகாரி ஒருவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டார். ஆனாலும் அவரை இங்கிருந்து இடமாற்றம் செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு அவரின் செல்வாக்கு அரசியல் மற்றும் காவல்துறை வட்டத்தில் இருந்துவருகிறது. மாவட்ட எஸ்.பி-யின் கவனத்துக்கு திருத்தணி காவல் நிலைய முக்கிய தகவல்கள் செல்வதில்லை. ஏற்கெனவே 117 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க போலீஸாரே பேச்சுவார்த்தை நடத்திய தகவல் டி.ஐஜி கவனம் வரை சென்றது. அதன்பிறகே சிறுமியை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். எனவே திருத்தணி காவல் நிலையத்தில் எஸ்.பி அரவிந்தன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மணிமேகலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

திருத்தணி மணிமேகலை வழக்கை மாவட்ட எஸ்.பி அரவிந்தனின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

தமிழக காவல் துறைக்கு எதிரான கண்னோட்டம் இருக்கும் சூழலில் திருத்தணி போலீஸாரின் நடவடிக்கைகள் இந்தச் சம்பவத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சாத்தான்குளம் சம்பவத்தில் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது. இந்தச் சம்பவத்துக்குபிறகு காவல்துறை டிஜிபி திரிபாதி, அனைத்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். ஆனால் அதன்பிறகும் சில காவல்நிலையங்கள் திருந்தவில்லை. மணிமேகலை மரணத்தில் நீதி கிடைக்குமா….

நமது நிருபர்