×

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே அதிர்ச்சி- நூல் விலை அதிரடி உயர்வு

 

பஞ்சுக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால் ஐந்து மாதத்திற்கு பிறகு நூல் விலை கிலோவிற்கு ரூ.7 உயர்ந்துள்ளது. 

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்து ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 மாதங்கள் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலை சீராக இருந்து வந்தது. இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை, நூற்பாலைகள் இன்று அறிவித்தது அதன்படி அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவிற்கு 7 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பஞ்சுக்கு 11 சதவீதம் வரிவிதிப்பை, அமெரிக்கா வரி விதிப்பால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட சூழலின் போது சுமார் ஒரு 5 மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த வரி விதிப்பு தளர்வு முடிவடைந்தது இதனை நீட்டிக்க கோரி ஏற்றுமதியாளர்கள் தரப்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது இதன் காரணமாக கடந்த மாதத்தில் இருந்து இறக்குமதி வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இருப்பினும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என நோட்பாலை உரிமையாளர்களும் ஏற்றுமதியாளர்களும் காத்திருந்த சூழலில் நேற்று வெளியான அறிவிப்பில் இது தொடர்பான எந்தவித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று நூற்பாலைகள் நடத்து மாதத்துக்கான நூல் விலையை அறிவிக்கும் போது ஏழு ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சு பற்றாக்குறை காரணமாகவும் இறக்குமதியாகும் பஞ்சின் வரி விதித்து காரணமாகவும் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் எனவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்றைய மாதத்திற்கான புதிய அறிவிப்பின்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.190, 16-ம் நம்பர் ரூ.200, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.258, 24-ம் நம்பர் ரூ.270, 30-ம் நம்பர் ரூ.280, 34-ம் நம்பர் ரூ.300, 40-ம் நம்பர் ரூ.318, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.255, 24-ம் நம்பர் ரூ. 263, 30-ம் நம்பர் ரூ.276, 34-ம் நம்பர் ரூ. 289, 40-ம் நம்பர் ரூ.308-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனா்.