☰
×

#BREAKING அருள் விக்னேஷ் மீதான பாலியல் வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. நியமனம்

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் தான் முதலில் பெரிய குழப்பம் இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் பிற்பகலில் அவர் நேரடியாகப் புகார் அளித்திருப்பதாக கூறப்படுவது வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.  அதாவது, 23.11.2026 திங்கட்கிழமை பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எம்.எல்.ஏ. தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும், தேவையற்ற மற்றும் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு தான் 24.11.2026 செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில், எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதே விசாரணையில் தான் விசாரணையை வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன் குமார் அபினபு கண்காணிப்பார் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐ.ஜி. காமினி மேற்பார்வை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ள தகவலும் வந்துள்ள நிலையில், இப்போது முழு விசாரணையும் கலெக்டர் கொடுத்த அந்த நேரடி புகாரை அடிப்படையாக வைத்தே நடைபெறும் என்பது தெளிவாகிறது.