×

ரிதன்யா தற்கொலை- தந்தை ஐ.ஜி அலுவலகத்தில் அவசர மனு

 

ரிதன்யா தற்கொலை - விசாரணை அதிகாரியை மாற்றக்கோரி தந்தை மனு

திருப்பூரில், புதிதாக திருமணம் ஆன ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில், விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி அவரது தந்தை அண்ணாதுரை ஐ.ஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது தந்தைக்கு ஆடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறி காரில் சென்ற ரிதன்யா, அவிநாசி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பூச்சிமந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூன்று பேரும் ஜாமின் கோரிய நிலையில், அவர்களது மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் திருப்பூரில் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி அவரது தந்தை அண்ணாதுரை ஐ.ஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில் விசாரணை தாமதமாக நடப்பதாகவும், விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.