திருப்பதி ஓட்டல்களில் சைனீஸ் உணவுகளை விற்க தடை- தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றியுள்ள உணவகங்களில் சைனீஸ் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் நேரடியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களை தவிர மற்ற அனைத்து விதமான டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களும் சம்பிரதாய உடை அணிந்து வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, குர்தா, பைஜாமா, பெண்கள் புடவை சுடிதார் அணிந்து வந்தால் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் தேவஸ்தானத்தின் அன்னப்பிரசாத கூடத்தில் சைவ முறைப்படி வெங்காயம் பூண்டு பயன்படுத்தாமல் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திருமலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் துரித உணவு வகை உரிமையாளர்களுடன் கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சௌத்ரி ஆலோசனை க் கூட்டம் நடத்தினார்.
இதில் திருமலைக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய ஆடை அணிந்து வருவது போன்று உணவு முறையும் சம்பிரதாய முறையில் இருக்க வேண்டும். திருமலைக்கு வரும் பக்தர்களில் அதிக அளவில் தேவஸ்தானம் வழங்கக்கூடிய அன்ன பிரசாதம் சாப்பிடுகின்றனர். ஆனால் மேலும் சில பக்தர்கள் தனியார் ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடக்கூடிய பக்தர்களுக்கும் சம்பிரதாய முறைப்படி தயார் செய்யக்கூடிய உணவுகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும். துரித உணவுகள் உணவகங்களில் சைனீஸ் உணவு பொருட்களை தயார் செய்யக்கூடாது என தெரிவித்தார்.இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் படிப்படியாக சைனீஸ் உணவு பொருட்கள் குறைக்கப்படும் என தெரிவித்திருப்பதாக கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சௌத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பக்தர்கள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் கூட எவ்வாறு சாப்பிட வேண்டும் என சாப்பிட வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்திருப்பது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேவஸ்தானம் வழங்கக்கூடிய அன்னப்பிரசாதத்தை சாப்பிட விரும்பாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பக்தர்களே தனியார் ஓட்டல்களில் அவர் அவர்களுக்கு விருப்பம் உள்ள உணவுகளை சாப்பிடுகிறார்கள். அந்த உணவில் கூட குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் தயார் செய்ய வேண்டும் அதனையே பக்தர்கள் அருந்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்திருப்பது தற்பொழுது பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.