×

"பாஜக மதத்தால் மக்களை பிரிக்க நினைத்தது" - திருச்சி சிவா

 

கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய திருச்சி சிவா எம்.பி., “இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களிடம் வரி வாங்கிக் கொண்டார்கள், ஆனால் அந்த வரிப்பணம்  கஜானாவிலிருந்து வேறு  இடத்திற்கு சென்றதே தவிர மக்களுக்கு திட்டங்களாக வரவில்லை, 10 ஆண்டுகாலம்  மனு கொடுத்தால் பதிலில்லை. கோரிக்கை கொடுத்தால் கேட்க ஆளில்லை, போராட்டம் நடத்தினால் சுட்டுக் கொன்றார்கள் இதுதான் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளிலேயே கோரிக்கை கொடுக்காமலே மக்களின் தேவை அறிந்து செயல்படுகிற ஆட்சி தான் திமுக ஆட்சி. 

கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, ஏனெனில் இந்த நாட்டை மதத்தின் பெயரால், வேறு பல காரணங்களால் மக்களை பிரிக்க நினைப்பவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பல சட்டங்கள் கொண்டு வந்தனர். அவையெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கூட்டாட்சிக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.