×

பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்துமீறல்- விசிக மாவட்ட செயலாளரின் மகன் உட்பட மூவர் கைது

 

அந்தியூர் அருகே தைப்பொங்கலை ஒட்டி நடந்த விளையாட்டுப் போட்டியின் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் துப்பட்டாவை இழுத்து தகராறு - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரின் மகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


கரூர் மாவட்டத்தை சேர்ந்த சையத் காதர் என்பவருடைய மகள் பைரோஸ் (20 வயது) இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு பொங்கல் விடுமுறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் விளையாட்டுப் போட்டி கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதனை வேடிக்கை பார்க்க சென்ற இளம் பெண்ணிடம் அங்கு வந்த இளைஞர்கள் சிலர் அத்துமீறி துப்பட்டாவை கையில் பிடித்து இழுத்து உள்ளனர்.‌ மேலும் தட்டி கேட்ட இளம் பெண்ணின் உறவினர்களையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து அறிந்த பைரோஸின் உறவினர்கள் இளைஞரின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்கச் சென்றபோது அங்கு சென்ற உறவினர்களையும் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் என்பவருடைய மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ், ஆகியோர் இளம் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியும் துப்பட்டாவை பிடித்து இழுத்தும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மேலும் இச்சம்பம் குறித்து அவர்களின் வீட்டிற்கு கேட்க சென்ற போது நிஷாந்தின் தந்தையான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரனும் தனது உறவினர்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் வழக்கு நான்கு பேர் மீது பதிவு செய்த அந்தியூர் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரனின் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன் , சுரேஷ் என்கிற பூபதி ஆகிய 3 பேரை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பெயரில் பவானி கிளை சிறைக்கு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகராறு ஏற்பட்ட போது தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி விசிக மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மருத்துவமனையில் உள்ளதால் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தீனதயாளின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் அந்தியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விசாரணை செய்யாமலேயே தனது மகன் கைது செய்யப்பட்டதாக கூறி தங்களுக்கு நியாயம் வேண்டும் என கேட்டனர், தொடர்ந்து அவர்களிடம் பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி அனுப்பி வைத்தார்.இதற்கு இடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தரப்பிலும் ரேவதி என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் பைரோஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.