மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட விரும்புவர்கள் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு பெறலாம்..!
மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட விரும்புவர்கள் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிற கட்சிகளில் எல்லாம் 10 ஆயிரத்திற்கும் உள்ளாகவே விருப்ப மனு கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் 50 ஆயிரம் நிர்ணயித்துள்ளது. செயற்குழுவில் கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செயற்குழுவில் கூறப்பட்டுள்ளாதவது:
மாநில சுயாட்சி என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை. அதில் தலையிடுவதும் இடையூறு விளைவிப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. நியமன பதவி வகிக்கிற தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. அவர் தனது பதவியின் மாண்புக்கேற்பவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் செயல்பட வேண்டுமென தமிழ்நாடு ஆளுநரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, பாஜகவை விமர்சித்து நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மதரீதியாக, ஜாதி ரீதியாக மக்களைப் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வருகை தரும்போதெல்லாம் தமிழை நேசிப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், பிற மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ் மக்களைத் திருடர்கள் என்றும் கொடுங்கோலர்கள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் கேவலமாகப் பேசுபவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேடைகளில் தமிழில் ஒரிரு வார்த்தைகள் பேசுவதும், ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிகக்குறைந்த நிதியே ஒதுக்குவதும், தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழ்வாய்வு அறிக்கைகளை முடக்குவதையும், மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் ஹிந்தியைத் திணிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கண்டிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.