புதிய பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் இனி கூடுதலாக இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.!
ஆதார் அட்டையை மட்டுமே ஆவணமாகக் கொண்டு பான் கார்டு பெற்று வந்த 'எளிமையான முறை' மார்ச் 31-டன் முடிவுக்கு வருகிறது. சிஎஸ்சி (CSC e-Governance Services India Limited) அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய பான் கார்டு கோருபவர்கள் அல்லது திருத்தங்கள் செய்பவர்கள் இனி கூடுதலாகப் பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்:
பான் கார்டில் உள்ள பெயர், இனி ஆதாரில் உள்ளவாறே துல்லியமாக இருக்க வேண்டும். இரண்டிலும் சிறு மாற்றம் இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 1 முதல் தற்போதுள்ள விண்ணப்பப் படிவங்கள் காலாவதியாகிவிடும். புதிய வகை படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பிறப்புச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது மாஜிஸ்திரேட் வழங்கிய உறுதிமொழிப் பத்திரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
நிபுணர்களின் அறிவுரை:
இந்த மாற்றங்களால் ஆவணச் சரிபார்ப்பு முறை இனி கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே, பான் கார்டு கோருபவர்கள் அல்லது பெயர்த் திருத்தம் செய்ய விரும்புபவர்கள், கூடுதல் ஆவணச் சுமையைத் தவிர்க்க மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பான் கார்டு என்பது வங்கித் பரிவர்த்தனைகள், வருமான வரி தாக்கல் மற்றும் முக்கிய நிதிச் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது என்பதால், இந்த மாற்றங்களை முன்கூட்டியே கவனித்துச் செயல்படுவது அவசியமாகும்.