உடனே இந்த திட்டத்தை அமல்படுத்துங்கள் - தூத்துக்குடி மீனவர்களின் வலுக்கும் கோரிக்கை..!!
தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பார் முதல் பெரியதாழை வரை 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மீன்பிடி மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக் கடலில் மீனவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலோ, அவர்களின் படகுகள் விபத்துக்குள்ளாகி, அவர்கள் காயம் அடைந்தாலோ உடனடியாக மருத்துவ உதவி வழங்குவதற்கான வசதி தற்போது போதுமான அளவில் இல்லை.
பாதிக்கப்பட்டவர்களை நடுக்கடலில் இருந்து கரைக்கு அழைத்து வருவதற்குள் ஏற்படும் காலதாமதம் காரணமாக, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘கடல் ஆம்புலன்ஸ்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட மீனவர்களிடையே வலுத்து வருகிறது.
கடலில் தயார் நிலையில் நிறுத்தப்படும் இந்த ஆம்புலன்ஸ் படகில், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் அவசர சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களும் இருக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 1 மருத்துவர், 2 செவிலியர்கள் என மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் கடல் ஆம்புலன்ஸ் சேவை இருக்க வேண்டும் என்றும், அவசர காலங்களில் மீனவர்களை உடனடியாக மீட்டு, கரையில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
கடலில் உயிருக்கு போராடும் மீனவர்களுக்கு கரை சேரும் வரை காத்திருக்காமல், கடலிலேயே உடனடி மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதே மீனவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.