“நிர்கதியாய் நின்ற என்னை திமுக அழைத்தது” - அஜிதா ஆக்னல் பேட்டி
அண்மையில் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அஜிதா ஆக்னல் , தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அஜிதா ஆக்னல். தமிழக வெற்றி கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி பணி ஆற்றி வந்த அஜிதா, தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவி அளிக்காததால் பனையூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார். ஆனால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அஜிதா ஆக்னலுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் அவரது கல்லூரி நண்பர் ஸ்ரீநாத்திற்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். இதன் காரணமாக தலைமை மீது அதிருப்தியில் அஜிதா ஆக்னல் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அஜிதா ஆக்னல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா ஆக்னல், “தவெகவில் மதிப்பு இல்லை. நிர்கதியாய் நின்றபோது திமுக என்னை அழைத்தது. அந்த கட்சியில் மக்கள் பணி செய்ய அங்கீகாரம் கொடுங்கன்னு கேட்டேன்.. ஆனா என்ன உதாசீன படுத்திட்டாங்க. விஜய் காரை மறைத்த போது பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உனக்கு அறிவில்லையா? நீ படித்த பெண் தானே... வேற கட்சிக்கு போ என மரியாதை இல்லாமல் திட்டினார். விஜய் மக்கள் இயக்கத்திற்காக நான் மட்டுமல்ல, என் குடும்பம் மொத்தமும் உழைத்தோம். கட்சி ஆரம்பித்த பிறகும் அதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்தேன். நான் தவெக கட்சிக்காக கடந்த 2- ஆண்டுகளாக முழுமையாக உண்மையாக உழைத்தேன். ஆனால் விஜய் என்னை ஒரு முறை கூட சந்திக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. ” எனக் கூறினார்.