×

திருப்பூர் குமரனுக்கு திமுக அரசு செய்த மரியாதை!!

 

சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்" என முதல்வர் முக ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்" என்று பெயர் சூட்டி பெயர் பலகையினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை யில் 1904ஆம் ஆண்டு நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி, திருப்பூரில் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் உயிரைத் துறந்தார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஈரோடு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை சம்பத் நகர்" என பெயர் மாற்றம் செய்ய , ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக அரசின் அனுமதி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை, சம்பத் நகர் எனப் பெயர் சூட்டி நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.