என்று தனியுமோ இந்த செல்பி மோகம்..! நீருக்குள் தவறி விழுந்த இளைஞர் மாயம்..!
சென்னையின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது பூண்டி ஏரி. தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஏரிப்பகுதியை சுற்றி பார்க்க வருகின்றனர். இந்நிலையில் நேற்று வியாசர்பாடி பகுதியில் இருந்து யாசிக் (22) என்ற இளைஞர் நண்பர்களுடன் அங்கு சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.
உபரி நீர் கால்வாயில் இருந்து வெளியேறும் நீரை நண்பர்களுடன் பார்வையிட்ட போது யாசிக் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.தொடர் கனமழை காரணமாக இங்கு நீர் கடல்போல் நிரம்பியுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழுந்ததில் அவரை தண்ணீர் வேகமாக இழுத்துச் சென்றது. நண்பர்களின் கண்முன்னே சில நொடிகளில் நீரில் மூழ்கி மாயமானார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக இதுகுறித்து புலரம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீர்த்தேக்க பகுதிக்குள் சுமார் 3 மணி நேரமாக யாசிக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருட்ட தொடங்கியதால் இளைஞரை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.மீண்டும் இன்று காலை ரப்பர் படகு உதவியுடன் தீயணைப்பு துறையினர் யாசிக்கை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.