இதற்காக தான் நாங்கள் தவெக-விற்கு ஆதரவு அளித்தோம் - சிபிஐ சிபிஎம் அறிவிப்பு..!
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் செயற்குழு மற்றும் மாநில குழுவை கூட்டி தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் கூறுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து தமிழக மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்துள்ளனர். நாங்கள் வழிமொழிந்து உள்ளோம்.
மே 10ஆம் தேதிக்குள் தவெக ஆட்சி அமைக்கவில்லை எனில் ஆளுநர் ஆட்சி அமையும் என்ற நிலையில் தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டிருந்தார். தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், மாறாக அவர் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை கேட்டுள்ளார். இது, கொல்லைப்புற வழியாக பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான நோக்கம் ஆகும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் ஆளுநர் மூலம் ஆட்சி நடத்தலாம் என்று பாஜக நினைக்கிறார்கள். அந்த நோக்கத்தை முறியடிக்கவே தவெகவுக்கு ஆதரவளித்துள்ளோம். அமைச்சரவையில் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். பாஜக வருவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை பெறவில்லை. மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து திமுகவுடன் இணைந்து போராடுவோம் . எதிர்வரும் தேர்தல் குறித்து இப்போது எதுவும் பேச தேவையில்லை. அதை அடுத்த தேர்தலின்போது பார்த்துக் கொள்ளலாம்.
தவெக ஆட்சியமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் எங்கேயும் தவெக ஆட்சியமைக்க கூடாது என்று கூறவில்லை" என்று தெரிவித்தனர்.
தவெகவுக்கு ஆதரவு தருவது குறித்து திமுகவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு "நாங்கள் தனிக்கட்சி. நாங்கள் ஏன் திமுகவிடம் அனுமதி பெற வேண்டும்? என்று சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார்.