இது தான் எங்களின் பயிர்களை சேதப்படுத்தியது... மாடுகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயிகள்..!!
தேனி மாவட்டம் கூடலூர் பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, எள், தட்டைப்பயறு, அவரை, துவரை போன்ற பயிர்களும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வயல்களில் நெல் பயிரும் சாகுபடி செய்யப்படுகிறது.
வனப்பகுதிகளில் இருந்து வரும் வனவிலங்குகள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே கூட லூர்-ஒழுகுவழி சாலை பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மற்றும் செட்டுநீர் குழாய்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தியதாக கூறி 50-க்கும் மேற் பட்ட எருமை மாடுகளை அழைத்து வந்து கூடலூர் தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மாடுகளின் உரிமையாளர்கள் இனிமேல் விளைநிலங்களுக்குள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடமாட்டோம் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாடுகளை உரிமையாளர்கள் அழைத்து செல்ல போலீசார் அனுமதித்தனர். 50-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.