திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இதுதான் நிலை! - அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனத்திற்கு துரைமுருகன் பதிலடி!
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்னுடைய 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் 'மாமன் மச்சான்' என யாரையும் கூப்பிட்டு பார்த்ததில்லை. எதிரி என்றால் எதிரியாகத்தான் இருக்க வேண்டும். சபைக்குள் என்ன 'மாமன் மச்சான்' உறவு?
அண்ணன் என்னடா, தம்பி என்னடா அரசியல் உலகத்தில் என்பதுதான் என் கேள்வி. நானும் அப்படிதான் இருந்தேன். என்னை வளர்த்தவர் எம்ஜிஆர். படிக்க வைத்தவரும் எம்ஜிஆர். அவர் என்னை கூப்பிட்டு 'வாடா மந்திரி பதவி தருகிறேன்' என்று சொன்னார். ஆனால், நான் எனது கட்சி திமுக என சொன்னேன். அப்போது, எனது உறுதியை பாராட்டுவதாக எம்ஜிஆர் கூறினார். அப்பேற்பட்ட என்னை வளர்த்த தாய் உள்ளம் கொண்ட எம்ஜிஆரையே சட்டசபையில் நேருக்கு நேர் கேள்வியெழுப்பியவன் நான்.
சுருக்கமாக சொல்லப்போனால் எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்கு செல்ல வேண்டும், ஆளும் கட்சிக்காரன் பாதுகாப்பு கேடயத்தோடு வர வேண்டும். இவன் சுழற்றுவான், அவன் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்கணும், இல்லையென்றால் சலாம் போட்டு விட்டு செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இனி வரும் நாட்களில் திமுக சட்டசபைக்கு வராது, வெல்ல முடியாது என தவெகவினர் சட்டசபையில் பேசியது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பலளித்த அவர், "யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு பின்னாடி யாரும் வர மாட்டார்கள் என்றுதான் சொல்வார்கள். இப்படிதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னாங்க. அவர்களை வீழ்த்தி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். நாங்களும் இதுபோல சொல்லியிருக்கோம், எங்களையும் எதிர்கட்சியினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பெருமைக்காக பேசுவது தான். அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எம்எல்ஏகளுக்கு கார் வழங்குவதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். ஆனால், கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலேயே உள்ளனர். மேலும், கார் இல்லை என்று சொன்னவர்களிடமே பல கார்கள் இருப்பதாக செய்தியில் பார்த்தேன். ஆகையால், ஏற்கனவே, கார் உள்ளவர்களுக்கு அதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மக்களின் கருத்து. திமுகவை பொருத்தவரை எங்களிடம் கார் இருக்கோ, இல்லையோ எங்களுக்கு அது வேண்டாம்" என்றார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி, அண்ணா அறிவாலயம் வாடகைக்கு விடப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இவரைப்போல பலர் இதை சொல்லியிருக்காங்க. திமுக முளைத்திலிருந்தே எதிர்ப்பை சந்தித்து வருகிறது. எங்களை விட்டு போன பலர் மீண்டும் எங்களிடம் வந்திருக்கிறார்கள். திமுகவை எதிர்த்து கட்சி நடத்தியவர்கள் எல்லாம் கடைசியில் திமுகவிடமே அடக்கம் ஆகிவிட்டார்கள்" என்றார்.