×

இதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு..! இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!

 

சீர்காழி தனியார் கூட்டுறவு வங்கியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீர்வளத்துறைக்கு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளது. குறிப்பாக, நீர்வளப் பாசனத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் - காவிரி ஆறுகளில் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் அமைப்பதை ஆய்வு செய்வதற்காக முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. கிராமப்புற பெண்களுக்கு ஆடுகள் வளர்ப்பதற்கு ரூ.110 கோடியும், கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ரூ.10,000 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இது கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நீர் மேலாண்மையை ஊக்கப்படுத்தவும் உதவும். காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி, அலையாத்தி காடுகளை வளர்ப்பதற்கு ரூ.1,732 கோடி எனப் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று  தாக்கல் செய்யப்படவுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கான ஆதார விலை குறித்த அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இன்று  வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன்களும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

அதேபோல், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என கொள்முதல் விலை அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். மேலும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு விவசாயிகள் காத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.