×

முதல்வர் விஜய் கரூர் செல்லும் தேதி இதுதான்..!

 

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்டம்பரில் நடந்த, தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். அவர்கள் குடும்பத்திற்கு, த.வெ.க., சார்பில், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து த.வெ.க., தலைவர் என்ற முறையில், விஜய் ஆறுதல் கூறினார். தேர்தலுக்கு பின் நேரில் வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக, விஜய் உறுதியளித்திருந்தார். தற்போது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க., ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், முதல்வர் விஜய் அங்கு செல்லவில்லை என்பதை, எதிர்க்கட்சிகள் புகாராக வாசித்து வருகின்றன.

இந்நிலையில், கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று (ஜூலை 02) தவெகவில் அவர் இணைந்தார். இணையும் நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் பலர் பங்கேற்று பேசினர். அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், 'வரும் ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார்' என அறிவித்தார்.

அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். அத்துடன், கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் புகைப்படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தவும், முதல்வர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.