எடப்பாடி செய்த அந்த 'பெரிய' துரோகம் இதுதான்! - முதல்முறை திமுக மேடையில் போட்டுடைத்த ஓ.பன்னீர்செல்வம்!
திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, மாலை 4 மணியளவில் கடையநல்லூர் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில்,அக்கூட்டங்களில் பேசிய அவர் அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களைப் பட்டியலிட்டார். அதிமுகவை ஒரு சமூகத்திற்கான கட்சியாக பழனிசாமி சுருக்கிவிட்டார், அதிமுகவை தனது சொந்தக் கட்சியாக மாற்றிவிட்டதுதான் அவர் செய்த மிகப்பெரிய துரோகம் என குறிப்பிட்டார்.
மேலும் பழனிசாமி குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சவர் ஆனார் என்றும் குறிப்பிட்டார்.
தங்களது திட்டங்களை நிறைவேற்றினால் நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாக குறிப்பிட்டார். கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்த அவர் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரே தொடர மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் வருங்காலத்தில் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும் இனி தமிழ்நாட்டை திமுகதான் ஆளும் நல்ல சூழலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.